குளத்தூர் : குளத்தூர் பஞ்சாயத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். விளாத்திகுளம் யூனியன், குளத்தூர் பஞ். கிராமசபை கூட்டம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கெச்சிலாபுரம் கிராமத்தில் பஞ். தலைவர் மாலதி செல்வபாண்டி தலைமையில் நடந்தது.
பிடிஓக்கள் தங்கவேல், முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், அரசுத்துறைகளின் சார்பில் தேர்வான பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசுகையில் ‘‘அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கெச்சிலாபுரம் கிராமத்தில் குளம் தூர்வாருதல், பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள ரூ55.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரூ.64லட்சத்துக்கான பணிகள் நடந்து வரும் நிலையில் 15வது நிதிக்குழு மூலம் மேலும் ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கலெக்டரிடம் இருந்து கிடைக்கப்பெற்றதும் பணிகள் விரைவில் துவங்கப்படும்’’ என்றார். முன்னதாக மார்க்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்திப் பேசினார். கூட்டத்தில் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளல், வரவு செலவு திட்ட அறிக்கைக்க்கு ஒப்புதல் அளித்தல், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், அனைத்து கிராம அண்ணாமறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பண்ணை சார்ந்த தொழில்கள் மேற்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இதில் கூடுதல் கலெக்டர் சரவணன், தாசில்தார் சசிகுமார், திமுக விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சின்னமாரிமுத்து, ஆர்ஐ சித்ரா, விஏஓ சதிஷ்குமார், சேகர், குளத்தூர் ஊராட்சி தலைவர் மாலதி செல்வபாண்டி, துணைத்தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன், கெச்சிலாபுரம் ஊர்த் தலைவர் மாரியப்பன், வேளாண் உதவி இயக்குநர் கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.