கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேவுள்ள மெதுக்கும்மல் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் அதங்கோடு பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 24-ம் தேதி பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து வெளியே வந்துள்ளான். அந்த சமயத்தில் பள்ளி வளாகத்தில் வைத்து இந்தச் சிறுவனுக்கு மற்றொரு மாணவன் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளான். அதை குடிக்கும்போது சிறுவனுக்கு நெஞ்செரிச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது குடித்த உடனே விளையாடிக்கொண்டிருந்த மற்றொரு சிறுவன் இவன்மீது மோதியதில் குளிர்பானம் கீழே விழுந்துள்ளது. அதையடுத்து, அந்தச் சிறுவன் வீட்டுக்குச் சென்றுவிட்டான். மறுநாள் காலையில் சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இப்போது பரவிவரும் வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம் என நினைத்து சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பெற்றோர் சிகிச்சை அளித்தனர். ஆனால், இரண்டு நாள்கள் ஆகியும் காய்ச்சல் குறையவில்லை. அதே சமயம் மாணவனுக்கு வாந்தியும், வயிற்றுவலியும் ஏற்பட்டுள்ளது. நாக்கில் வெளிர் கொப்பளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநிலம், நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு ஸ்கேன் எடுத்தபோது வாய் பகுதியிலிருந்து குடல் பகுதிவரை ஆசிட் பட்டதுபோன்று வெந்து கொப்பளம் ஏற்பட்டு வெளிறிய நிலையில் இருந்துள்ளது. மேலும் சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
சிறுவன் ஆசிட் அல்லது வேறு எதாவது அமிலம் குடித்தானா என பெற்றோரிடம் மருத்துவர்கள் கேட்டுள்ளனர். அப்போது கண்டால் தெரியும் மாணவன் ஒருவன் குளிர்பானம் குடிக்க கொடுத்த விஷயத்தை சிறுவன் கூறியுள்ளான். அந்த குளிர்பானத்தில் என்ன கலந்தது என அறியும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கும், களியக்காவிளை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குளிர்பானம் கொடுத்த மாணவனை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
இந்த சிறுவன் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து வந்துள்ளதாக பெற்றோர் கூறுகின்றனர். காரைக்கால் பகுதியில் தன் மகனைவிட நன்றாகப் படித்த மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்த கொடூர சம்பவம் கடந்த மாதம் நடந்தது. அதுபோன்று படிப்பில் போட்டி காரணமாக 6-ம் வகுப்பு சிறுவனுக்கு குளிர்பானத்தில் ஏதாவது அமிலம் கலந்துகொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.