கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் இன்று முதல் அப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் அழகான பகுதி பேரிஜம் பகுதியாகும். இந்த பகுதிக்கு செல்வதற்கு வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
மேலும் கொடைக்கானல் மோயர் பாயிண்டுக்கு அடுத்துள்ள இடங்களுக்கு செல்லவும் வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும். இந்த பகுதியில் தொப்பி தூக்கும் பாறை, பேரிஜம் ஏரியின் கழுகு பார்வை, அமைதி பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இன்று அதிகாலை இந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.
இதுபற்றி வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், இன்று அதிகாலை யானைக் கூட்டம் ஒன்று குட்டிகளுடன் பேரிஜம் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இன்று முதல் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைகள் இந்த பகுதியை விட்டு அகன்ற பிறகு தான் இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றார். யானைகள் நடமாட்டம் காரணமாக பேரிஜம் வனப்பகுதி மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.