கோவில்பட்டி: எட்டயபுரத்தில் நடந்த சாலை விரிவாக்கப் பணிக்காக கான்சாபுரத்தில் அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் அமைக்கப்படாததால் பயணிகள் வெயிலில் வாடியும், மழையில் நனைந்தும் சிரமப்பட்டு வருகின்றனர். எட்டயபுரம் கான்சாபுரம் பேருந்து நிறுத்தப்பகுதியில் இருந்து கோவில்பட்டி, கடலையூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு மக்கள் அதிகளவு சென்றுவருகின்றனர். இதற்காக இப்பகுதியில் பயணிகள் நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம்அமைக்கப்பட்டிருந்தது. இது மக்களுக்கு மிகவும்பயனுள்ளதாக இருந்து வந்தது.
கடந்த 2015-ம் ஆண்டுவேம்பார் முதல் பருவக்குடி வரையிலான சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்றது. அப்போது எட்டயபுரம் கான்சாபுரத்தில் சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. அதன் பின்னர் பயணிகள் நிழற்குடை புதிதாக அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளிமாணவ, மாணவிகள் சாலையோரம் உள்ள கடை வாசல்களிலும், வெயில் மற்றும்மழையில் நனைந்தவாறும் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு.ரவீந்திரன் கூறும்போது, ‘‘எட்டயபுரம் கான்சாபுரம் பகுதியில் இருந்து மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கும், கோவில்பட்டியில் உள்ள தொழிற்பேட்டையில் செயல்படும் கம்பெனிகளுக்கு தொழிலாளர்கள் வேலைக்கும் பேருந்துகளில் சென்று வருகின்றனர்.
இங்குள்ள நிழற்குடை அகற்றப்பட்டதால் பெண்கள், முதியோர், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேரூராட்சியில் முறையிட்டோம். அவர்கள்நிழற்குடை அமைந்திருந்த இடம்மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என கூறினர்.நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை விடுத்தபோது, அவர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் கடந்த 7 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.