சென்னை: சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.697 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் முதல் அரையாண்டை விட ரூ.208 கோடி அதிகம் ஆகும்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள கட்டிட மற்றும் நில உரிமையாளர்களிடம் சொத்து வரியும், தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரியும், தொழில் உரிமம் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது.
இந்த முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி மொத்த வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி, முதல் அரையாண்டில் ரூ.697 கோடி சொத்து வரி வசூல் ஆகியுள்ளது. இதில் கடந்த முதல் அரையாண்டை விட ரூ.208 கோடி அதிகம் ஆகும். மேலும் ரூ.248 கோடி தொழில் வரி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.9 கோடி அதிகம் ஆகும்.
குறிப்பாக, கடந்த 2021 – 2022 நிதியாண்டில் மொத்தமே ரூ.1240 கோடி தான் வரி வசூலாகி இருந்தது. ஆனால், தற்போது முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வசூலாகியுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. புதிய உயர்த்தப்பட்ட சொத்து வரி காரணமாக சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் அதிக அளவு சொத்து வரி வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.