தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே, திமுக அமைச்சர்கள் ஆங்காங்கே பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைராலகிவருகின்றன. அதிலும் அமைச்சர் பொன்முடி, ஒருவிழாவில் அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்வதை, `ஓசி’ எனக் குறிப்பிட்டுப் பேசியது அரசியல் தலைவர்கள் பலராலும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், திமுக-வில் நடைபெறவிருக்கும் உட்கட்சித் தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுரையோடு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். கழகத் தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, என் இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி, அக்டோபர் 7-ம் நாள் வேட்பு மனுத்தாக்கல் செய்யவிருக்கிறேன். திராவிட இயக்கம் நூற்றாண்டு காலமாக இந்த மண்ணில் ஓயாது பாடுபட்டு, மக்கள் மனதில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் உருவாக்கி, ஈராயிரம் ஆண்டுக்கால ஒடுக்குமுறைகளைத் தகர்த்து, இன்று ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற திராவிட மாடல் நல்லரசை வழங்கி வருகிறது.
கடைக்கோடி மனிதர்களுக்கும், கடைசி குக்கிராமத்துக்கும் அரசின் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் சென்று சேர வேண்டும் என்கிற சிந்தையுடனும் முனைப்புடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது அரசு ஒவ்வொரு நொடியும் செயல்பட்டு வருகிறது. இதற்கு எப்படியாவது ஊறு விளைவித்திட வேண்டும் என நினைப்போரைச் சரியாக அடையாளம் கண்டு நாம் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயலாற்றிட வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை விளைவதைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாத பொல்லாங்கு எண்ணம் கொண்டோர், நமக்கு எதிராகச் சிறு துரும்பையும் பெரும் தூணாக்க முடியுமா எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிறு துரும்புக்கு மட்டுமல்ல, தூசுக்கும்கூட இடம் கொடுக்காத வகையில், நாம் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது. அமைச்சர் பெருமக்களுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சிப் பொறுப்பிலே இருக்கக்கூடிய கழக நிர்வாகிகளுக்கும் நான் ஏற்கெனவே செப்டம்பர் 26-ம் நாளன்று ஓர் அறிக்கை வாயிலாக அன்புக்கட்டளை விடுத்திருக்கிறேன். அதனை மீண்டும் நினைவூட்டுகிறேன். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும், பொறுப்புடனும், கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள்.
நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திடச் சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன். நாம் பேசுகிற நீண்ட பேச்சில், தொடர்பில்லாமல் ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து, அதிலும் வெட்டி – ஒட்டி, திரித்து மோசடி செய்து, வெற்றுப் புழுதியைக் கிளப்பி, அதனை எதிர்ப்புப் புயல் என நம்பவைக்க நினைக்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். அவர்களின் கற்பனையிலும் கனவிலும்தான் புழுதிமண் விழும்; விழ வேண்டும். அதற்கேற்ப உங்களின் சொற்களும் செயல்களும் கவனம் குறையாத வகையில் அமைந்திட வேண்டும்” என ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
தி.மு.க-வின் 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ள நிலையில் தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.