புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் தேர்தல், வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திரிபாதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் மட்டும் களத்தில் உள்ளனர்.
இந்தநிலையில், மல்லிகார்ஜுன கார்கே நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சோனியாகாந்தி குடும்பத்தின் ஆதரவு பெற்றவராக அவர் கருதப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
சோனியாகாந்தி குடும்பம் என்னை ஆதரிப்பதாக கூறுவது தவறு. மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களும் என்னை போட்டியிடுமாறு வற்புறுத்தினர். அதனால் நான் போட்டியிடுகிறேன். யாருக்கு எதிராகவும் நான் நிற்கவில்லை. கட்சியை வலுப்படுத்தவே நிற்கிறேன்.
‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கோட்பாடு பின்பற்றப்படுவதால், வேட்புமனு தாக்கல் செய்த நாளிலேயே மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன்.
நாட்டில் வேலையின்மையும், பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. பா.ஜனதாவின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று அவர் கூறினார்.
”நான், மாற்றத்துக்கான வேட்பாளர். மல்லிகார்ஜுன கார்கே, தற்போதைய நிலை தொடர்வதற்கான வேட்பாளர்” என்று சசிதரூர் கூறியது பற்றி நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு மல்லிகார்ஜுன கார்கே, ”தேர்தல் முடிந்தவுடன் சீர்திருத்தம் தொடர்பான முடிவு, கூட்டாக எடுக்கப்படும்” என்று கூறினார்.
பேட்டியின்போது உடன் இருந்த கவுரவ் வல்லப், தானும், தீபேந்தர் ஹூடா, சையது நாசர் உசேன் ஆகியோரும் செய்தித்தொடர்பாளர்கள் பதவியில் இருந்து விலகி விட்டதாகவும், மல்லிகார்ஜுன கார்கேவுக்காக பிரசாரம் செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.