ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க அனுமதி புகாரின் அடிப்படையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவருமான பங்கஜ் மிஸ்ராவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டு, தற்போது வரை நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் கையொப்பமிட்ட மற்றும் கையொப்பமிடப்படாத காசோலை புத்தகம் மற்றும் வங்கி புத்தகம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டப்படுவதாக அமலாக்க இயக்குனரகம் (ED) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘முதல்வரின் உதவியாளரான பங்கஜ் மிஸ்ரா மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டது. தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். மேலும் அவரது கூட்டாளிகளான பச்சு யாதவ், பிரேம் பிரகாஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் பங்கஜ் மிஸ்ராவின் வீட்டில் இருந்து முதல்வர் ஹேமந்த் சோரனின் காசோலை புத்தகம் மற்றும் வங்கிக் கடவுச்சீட்டு ஆகியவை கைப்பற்றப்பட்டன’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.