பழநி: தமிழகத்தில் அரசு பணிகள் பெரும்பாலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், காவலர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ படிப்பிற்கு நீட் போன்றவை மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலமே தேர்வு செய்யப்படுகிறது.
இத்தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் கோச்சிங் சென்டர்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பல தகுதியானவையாக இல்லையென்றும், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை மூளை சலவை செய்து லட்சக்கணக்கான ரூபாய்களை பிடுங்கி விடுவதாகவும், தற்போது புகார்கள் வருகின்றன. இம்மையங்களை ஒழுங்குபடுத்த வேண்டுமென தற்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், பெற்றோர்களின் ஆசை, அறியாமைகளை பயன்படுத்தி கோச்சிங் சென்டர்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்படுகிறது. குறிப்பாக நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கை அளவிட முடியாத அளவிற்கு தோன்றி உள்ளது. தவிர போலீஸ் தேர்வுகள், டெட் தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் போன்ற பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வந்தவுடன் முதலில் இலவசம் என துவங்கி, பின், படிப்படியாக பணம் பிடுங்கப்படுகிறது.
இங்கு முறையாக பாடம் நடத்தப்படுகிறதா?, தகுதியான பயிற்றுநர்கள் உள்ளனரா? என்பதை அரசு கவனிக்க வேண்டும். தமிழகத்தில் புற்றீசல்கள் பெருகி வரும் கோச்சிங் சென்டர்களை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.