காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17 ஆம் தேதி (அக்.,17) நடைபெற உள்ளது. இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்பியுமான சசி தரூம் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் இருவரும் இடையே நேரடி போட்டி நிலவுவதாக தெரிந்தாலும், கட்சியின் சீனியர்களில் பெுரும்பாலோரின் ஆதரவும், சோனியா குடும்பத்தின் ஆசியும் இருப்பதாக கூறப்படுவதால் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெறுவதும் அனேகமாக உறுதி என்று காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது,
இந்த நிலையில், மத்திய முன்னாள் அமைச்சரும், சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவருமான ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளது கேரள மாநில காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தை பூர்வீகமாக கொண்டவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூருக்கு தமது ஆதரவை தெரிவிக்காமல். அண்டை மாநிலமான கர்நாடகாவை சேர்ந்த கார்கோவுக்கு எப்படி அந்தோணி தமது ஆதரவை தெரிவிக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம், அந்தோணியின் மகனும், கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகியுமான அனில் அந்தோணி சசி தரூருக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார். இது, எப்படி ஒரே கட்சியில் இருக்கும் தந்தையும், மகனும் வெவ்வேறு வேட்பாளர்களை ஆதரிக்கின்றனர் என்ற வியப்பு கலந்த கே்ள்வியை எழுப்பியுள்ளது.
தந்தை ஆதரிக்கும் வேட்பாளரையே அவரது மகனும் ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை. சசி தரூரை ஆதரிக்க விரும்பிய அனில் அந்தோணி, அதற்கான தமது முழு சம்மதத்தையும் ஏ.கே.அந்தோணி அளித்துள்ளார் என்பதையே இது காட்டுகிறது.
இதுதான் உண்மையான உட்கட்சி ஜனநாயகம். இதன்மூலம், கட்சியின் மூத்த தலைவர்களின் பெருவாரியான ஆதரவை பெற்ற வேட்பாளராக கருதப்படும் கார்கேவுக்கு அந்தோணி தமது ஆதரவை தெரிவித்திருக்கும் நிலையில், அவரது மகன் அனில் அந்தோணி, சசிதரூரை ஆதரிப்பது, கட்சியின் தேசிய தலைமை, கட்சியின் மாநில தலைமை ஆகிய இரண்டையும் லாவகமாக கையாளும் ஸ்மார்ட் பாலிடிக்ஸ் என்கின்றனர் கேரள மாநில காங்கிரஸ் தொண்டர்கள்.
எப்படியோ, காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலால் அப்பா, மகனுக்குள் கருத்து வேறுபாடு வராமல் இருந்தால் சரிதான் என்ற முணுமுணுப்பு குரல்களும் கட்சிக்குள் கேட்கதான் செய்கிறது.
கேரள மாநில காங்கிரசில் மூத்த தலைவர்களான கொடிக்குன்னில் சுரேஷ், கே.முரளீதரன் போன்றவர்கள் சசி தரூரை ஆதரிக்கவில்லை என்பதைத் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். அத்துடன் ஏ.கே.அந்தோணி, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.