கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுதலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்தநிலையில் நவராத்திரி விடுமுறை தொடங்கி விட்டதால் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்ட தொடங்கியது. அதுபோல் இன்று காலையும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.
தொடர்ந்து அதிகாலை திரிவேணி சங்கத்தில் படித்தரையில் அமர்ந்து சூரிய உதயம் கண்டு ரசித்தனர். அதன்பின் கடலில் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் பகவதியம்மன் கோயில் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்த பாறைக்கு பூம்புகார் படகில் சென்றனர். அங்கு நீண்ட வரிசையில் காத்து நின்று விவேகானந்தர் சிலை மற்றும் பாறையை கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் அறைகள் நிரம்பி வழிந்தது. அதுபோல் பிளாட்பார்ம் மற்றும் நிரந்தர கடைகளிலும் சுற்றுலா பயணிகள்கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதிகாலை வானவில் கண்டு மகிழ்ச்சி: கன்னியாகுமரியில் இன்று காலை முதல் சாரல் மழை பொழிந்த வண்ணம இருந்தது. இதனால் வானம் கருமேகம் சூழந்த நிலையில் காணப்பட்டது. இருப்பினும் சூரிய உதயம் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். இதையடுத்து சூரிய உதய காட்சி கண்டு ரசித்த சுற்றுலா பயணிகளுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியாக ஆகாயத்தில் வானவில் தோன்றியது. கடலையும், வானத்தையும் இணைத்த வண்ணம் இருந்து இந்த காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.