டொரன்டோ-கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள பகவத் கீதை பூங்கா சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த புகாருக்கு, அந்த நகர நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவில், சமீபகாலமாக இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகம் நடந்து வருகின்றன.
இதையடுத்து அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியத் துாதரகம் அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், பிராம்ப்டன் நகரில் உள்ள பூங்காவுக்கு, செப்., 28ல் ஸ்ரீ பகவத் கீதை பூங்கா என்று பெயரிடப்பட்டது.
இதற்கிடையே பூங்காவின் பெயர் பலகை எவ்வித எழுத்துக்களும் இல்லாமல் காலியாக இருந்தது. இதையடுத்து பூங்காவுக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் அழிக்கப்பட்டதாக, அங்குள்ள இந்தியத் துாதரகம் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து பிராம்ப்டன் நகர மேயர் பேட்ரிக் பிரவுன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தப் பிரச்னையை எழுப்பியதற்கு நன்றி. பூங்காவுக்கான புதிய பெயருடன் கூடிய பெயர் பலகை தயாராகி வருகிறது. அதுவரை இந்தப் பலகை காலியாக இருக்கும். மற்றபடி பெயர் பலகை அழிக்கப்படவில்லை; சேதப்படுத்தப்படவில்லை.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement