சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை வாங்க பாஜ முயற்சி செய்து வருவதாக முதல்வர் பகவந்த் சிங் மான் குற்றம்சாட்டினார். எம்எல்ஏக்களை வளைக்க பாஜ கட்சி தலா ரூ.25 கோடி ரூபாய் வரை தருவதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், சட்டப்ேபரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வர் மான் முடிவு செய்தார். அதன்படி கடந்த மாதம் 22ம் தேதி ஆம் ஆத்மி அரசு சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க தயாராக இருந்தது. சட்டப்பேரவையை கூட்டுவதற்கு ஆளுனர் அனுமதி மறுத்து விட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் சட்டப்பேரவை கூட்ட கடந்த 27ம் தேதி ஆளுனர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், பேரவையில் நேற்று நடந்த கூட்டத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக 91 எம்எம்ஏக்கள் வாக்களித்தனர். சிரோன்மணி அகாலிதளத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ, பிஎஸ்பி கட்சியின் ஒரு எம்எல்ஏவும் சட்டமன்றத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் இந்த தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்று சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் தெரிவித்தார். காங்கிரசின் 18, பாஜவின் 2, ஒரு சுயேச்சை எம்எல்ஏ வெளிநடப்பு செய்தனர். இதன் மூலம், பஞ்சாப்பில் பாஜவின் ‘ஆபரேஷன் தாமரை’ சூழ்ச்சி தோல்வி அடைந்திருப்பதாக முதல்வர் பகவந்த் மான் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.