தெற்கு டெல்லியின் லோதி காலனியில் இரண்டு பேர் ஆறு வயது சிறுவனை கழுத்தை அறுத்து, தலையில் தாக்கி `நரபலி’ கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரி இந்த சம்பவம் குறித்து தெரிவித்திருப்பதாவது, “ குற்றம் சாட்டப்பட்ட விஜய் குமார், அமர் குமார் ஆகியோரும், சிறுவனின் பெற்றோரும் கட்டடத் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர்கள். துர்கா பூஜை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில், அந்த சிறுவன் துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.
அப்போது விஜய் குமார், அமர் குமார் ஆகிய இருவரும் சிறுவனை தாங்கள் சமையல் செய்யும் இடத்திற்கு வரவழைத்து, முதலில் தலையில் தாக்கி பின்னர் கழுத்தை அறுத்து கொன்றனர். குற்றத்தில் ஈடுபட்ட போது குற்றவாளிகள் இருவரும் போதையில் இருந்தனர்” எனக் தெரிவித்தார். குற்றவாளிடம் விசாரணை செய்ததில் பணக்காரராக (செழிப்புடன்) வாழ கடவுள் சிறுவனை பலி கொடுக்க கூறியதாகவும் அதனால் சிறுவனை கொன்றதாகவும் கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த போது சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் துர்கா பூஜை கொண்டாட்டங்களில் இருந்ததாக தெரிவித்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் குற்றவாளிகள் அணிந்திருந்த ஆடைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தநிலையில் இந்த இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.