பெங்களூரு: பிரிட்டிஷ் பேரரசை காந்தி எதிர்த்து போராடியது போல் காந்தியை சுட்டுக்கொன்ற சித்தாந்தத்துடன் காங்கிரஸ் இன்று போராடி கொண்டிருப்பதாக கொட்டும் மழையிலும் ராகுல் காந்தி ஆவேசத்துடன் பேசியுள்ளார். தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்குகிறார். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மைசூரில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச வந்தபோது திடீரென கனமழை பெய்ய தொடங்கியது.
ஆனாலும் கனமழையை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே உரையை தொடர்ந்தார் ராகுல் காந்தி. இடைவிடாது மழைக்கு மத்தியில் ராகுல் காந்தி பேச்சை நிறுத்திக்கொள்வார் அல்லது குடையை பிடித்தபடி உரையை தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையில் நனைந்தபடியே ராகுல் காந்தி பேச்சை தொடர்ந்தபோது காங்கிரசார் ஆரவாரம் செய்தனர். பேரணியில் தன்னுடன் பங்கேற்றவருக்கும், பலத்த மழை பெய்தாலும் தனது பேச்சை கேட்டு ஆதரவு அளித்ததற்கும், காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரிட்டிஷ் பேரரசை காந்தி எதிர்த்து போராடியது போல் காந்தியை சுட்டுக்கொன்ற சித்தாந்தத்துடன் காங்கிரஸ் இன்று போராடுவதாக கூறினார். அந்த சித்தாந்தம், சமத்துவமின்மை, பிரிவினை போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளதாக பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐ அவர் மறைமுகமாக சாடினார். கனமழையிலும் அவர் பேசும் வீடியோவை காங்கிரஸ் தலைவர்கள் பகிர்ந்து, ராகுல் காந்தியின் பயணத்தை இயற்கையால் மட்டுமல்ல, யாராலும் தடுக்க முடியாது என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.