பிரேசில் அதிபர் தேர்தல்: மீண்டும் வெற்றி பெறுவாரா ஜெயீர் போல்சனரோ..?

பிரேசிலியா,

உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ மீண்டும் போட்டியிடுகிறார். அவர் உள்பட மொத்தம் 9 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் களத்தில் உள்ளனர்.

எனினும் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்துள்ள இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையில்தான் பலபரீட்சை நடக்கிறது.

கொரோனா தொற்றை கையாண்ட முறை, அமசோன் மழைக்காடுகள் அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயீர் போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதே வேளையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் சில்வாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை காட்டுகின்றன.

பிரேசில் தேர்தல் நடைமுறையின் படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற தவறினால், அதிக வாக்குகளை பெற்ற 2 வேட்பாளர்களுக்கு இடையில் 2-ம் சுற்று தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.