புதிய அட்டர்னி ஜெனரலாக புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம்

டெல்லி: மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக, புதுச்சேரி மாநிலத்தை பூர்விகமாக கொண்ட மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு  பிறப்பித்தார்.

தற்போதைய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய அட்டார்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியை மத்தியஅரசு நியமனம் செய்தது. ஆனால், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, புதிய அட்டர்னி ஜெனரலாக ஆர்.வெங்கடரமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிறப்பித்துள்ளார்.

அட்டார்னி ஜெனரல் பணியில் ஆர்.வெங்கடரமணி 3 ஆண்டுகள் நீடிப்பார். உச்சநீதிமன்றத்தின் மத்திய அரசு மூத்த வழக்கறிஞர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த வெங்கடரமணி, பெரும்பாலும் மறைமுக வரி தொடர்பான வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடியவர் ஆவார்.

இவர், புதுச்சேரியில் 1950ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பிறந்த வெங்கடரமணி, 1977ம் ஆண்டு தமிழக வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு பெற்றார். 1997ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞராக இவரை நியமித்தது. இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். தமிழகம், ஆந்திரப் பிரதேச மாநில அரசுகளுக்கான சிறப்பு மூத்த வழக்கறிஞராகவும் வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார். தற்போது இவர் மத்தியஅரசின் அட்டர்னி ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.