வாஷிங்டன்,
அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற ‘இயான்’ புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே இயான் சூறாவளி புயல் கடந்த புதன்கிழமை மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
புளோரிடாவை சூறையாடி சென்ற இயான் சூறாவளி புயல், தெற்கு கரோலினா கடற்கரையில் 2-வது முறையாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. தீவிர வலுவுடன் தாக்கிய இந்த புயலால் நீரில் மூழ்கிய பகுதிகளில் இன்னும் உயிர் பிழைத்தவர்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய இயான் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50க்கு மேல் அதிகரித்துள்ளது. இதுவரை புயலில் சிக்கி குறைந்தது 54 பேர் உயிரிழந்ததாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
புயல் மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர் என புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார். இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளது.
உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை புயலில் சிக்கி புளோரிடாவில் குறைந்தது 76 பேரும், வட கரோலினாவில் நான்கு பேரும் உயிரிழந்ததாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட்டு பேரழிவை ஆய்வு செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரும் புதன்கிழமை புளோரிடா செல்ல உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.