திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி தூத்துக்குடியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அண்ணன், தம்பிகள் மூவர் உட்பட 6 பேர் பலியாகினர். இதில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. 2 பேர் உடலை தேடும் பணி தொடர்கிறது. தூத்துக்குடியில் இருந்து ஒரு பஸ்சில் பெண்கள் 24 பேர், ஆண்கள் 18 பேர், குழந்தைகள் 15 பேர் என மொத்தம் 57 பேர் நேற்றுமுன்தினம் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து நேற்று காலை தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்த அவர்கள், பூண்டி மாதா கோயிலுக்கு செல்வதற்காக பூண்டி வந்தனர். முன்னதாக குளித்து விட்டு வருவதற்காக கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றனர்.
இதில் 9 பேர் மட்டும் தனியாக சென்று குளித்துள்ளனர். ஆழம் தெரியாத நிலையில், எதிர்பாராதவிதமாக 9 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆற்றில் குதித்து தாமஸ், ஆபிரகாம், செல்வம் ஆகிய மூன்றுபேரை உயிருடன் மீட்டனர். மற்ற 6 பேரும் நீரில் மூழ்கி மாயமானார்கள்.தகவலறிந்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் காலை 11 மணியளவில் சார்லஸ் (38), பிரிதிவ்ராஜ் (36) இருவரின் உடல்களை மீட்டனர். மாலையில் தாவீத்(30), பிரவீன்ராஜ் (19) ஆகிய இரண்டு பேரின் சடலங்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஹெர்மஸ்(18), ஈசாக்(19) ஆகிய 2 பேரின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இதில் சார்லஸ், பிரிதிவ்ராஜ், தாவீத் ஆகிய 3 பேரும் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டியை சேர்ந்த துரைராஜ் மகன்கள் ஆவார்கள். மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் பிரவீன்ராஜ். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் தேடுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீனவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து நேற்று மாலை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் ஆர்டிஓ ரஞ்சித், பூதலூர் தாசில்தார் பெர்சியா உள்ளிட்டோர் சென்று விசாரணை நடத்தினர். மீட்கப்பட்ட 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.