கோதுமைநிற ரஞ்சிதாவோடு குதூகலமாகப் பேசிக்கொண்டிருந்தார் சத்யராஜ். வெஸ்ட் C.I.T நகர் நந்தி ஹவுஸில் ‘தோழர் பாண்டியன்’ படப்பிடிப்பு…. வேறொரு காட்சியை டைரக்டர் மணிவண்ணன் படமாக்கிக் கொண்டிருக்க, அடுத்து வரும் தனது காட்சிக்காக மேக்கப்போடு சத்யராஜ் இருந்தபோதுதான் படத்தின் நாயகியுடன் சுவாரஸ்ய அரட்டை… இடையே நாம் புகுந்தோம் (கரடி… கரடி). டின்னரைப் பற்றிப் பேச்சைத் துவங்கியதும் சேரில் சரிந்திருந்த சத்யராஜ், நிமிர்ந்து உட்கார்ந்தார். சில விநாடி யோசனைக்குப் பின் பேச ஆரம்பித்தார்.
“நான் டின்னருக்குக் கூப்பிடறதா இருந்தால் தந்தை பெரியாரைத்தான் கூப்பிடுவேன்… காரணம். அவர் மறைந்து விட்டாலும் அவருடைய கொள்கைகள் உயிரோடு இருக்கின்றனவே! அதனால் கண்டிப்பாக அவரே என் கெஸ்ட்!
தொண்டர்களைக்கூடச் சுதந்திரமாகச் சிந்திக்க வெச்சவர் பெரியார். அவர்கிட்டே ஒரு தொண்டர். “அய்யா, எனக்கு ஒரு சின்னச் சந்தேகம்” என்று கேட்க, “கேளப்பா… கேள்வி கேட்க மாட்டேங்கறீங்ளேன்னுதான் நான் வருத்தப்படறேன்” என்றார் பெரியார். “நீங்க கடவுள் இல்லே… இல்லே’ன்னு சொல்றீங்களே… திடீர்னு உங்க முன்னாடி கடவுள் தோன்றிட்டா அப்புறம் என்ன சொல்லுவீங்க?’ என்று கேட்டார் அந்தத் தொண்டார். இருக்குதுன்னு சொல்லிட்டுப் போறேன். கடவுளைப் பார்க்காததால்தானே இல்லேன்னு சொல்றேன்… பார்த்துட்டா ஒப்புக்கறேன்’ என்று பளிச்சென சொல்லிவிட்டார் பெரியார்.
இன்னொரு விஷயத்தையும் பெரியார் தெளிவா சொல்லியிருக்கார் “நான் கடவுள் இல்லேன்னு சொல்றதைத் தப்பா நினைக்கிறீங்களே… இந்து மதத்தைச் சேர்ந்தவன் ‘ஏசு இல்லே’ங்கிறான். கிறிஸ்தவன் ‘சிவபெருமானும் அல்லாவும் இல்லே’ங்கிறான். முஸ்லிமோ ‘ஏசுநாதருமில்ல… சிவபெருமானுமில்லே’ங்கிறான். இப்படி ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவங்களும் அடுத்த மதத்துக் கடவுள் இல்லேங்கிறாங்க. அதையெல்லாம் கேட்கமாட்டேங்கிறீங்களே. நான் சொன்னா மட்டும் கோவிச்சுக்கிறீங்களே” என்று மிக எளிமையா, தைரியமா சொல்லியிருக்கார் பெரியார்.
அவர் சொன்னதில் கடவுள் மறுப்புக் கொள்கையும் பிராமணர் எதிர்ப்புக் கொள்கையும்தான் பெரிசுபடுத்தப் பட்டிருக்கு. தொழில் வளர்ச்சி, பொருளாதாரம், பெண்ணுரிமை, சமத்துவம் பற்றியெல்லாம் எவ்வளவோ சொல்லியிருக்கிறார். மது ஒழிப்பு பற்றி சொன்னதோட நிற்காமல், கள் இறக்கிவிடக்கூடாதே என்று தன்னோட பல ஏக்கர் நிலத்தில் இருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்திருக்கிறார். தென்னையை வெட்டுறதுன்னா பின்ளையை வெட்டுறது மாதிரி. இன்னும் சொல்லப்போனா அதை விட ஒருபடி மேலே… ‘பிள்ளையைப் பெத்தா கண்ணீரு… தென்னையைப் பெத்தா இளநீரு’ என்று கவிஞர் பாடியிருக்கார். தென்னை மரத்தோட அருமை எனக்கும் தெரியும்… நானும் பொள்ளாச்சி பக்கத்திலே தென்னந்தோப்பு வாங்கிப் போட்டிருக்கேன். மார்க்கெட் போயிடுச்சுன்னா மரமாவது காப்பாத்துமேன்னுதான்! அப்படிப்பட்ட தென்னந்தோப்புகளையே வெட்டிச் சாய்ச்சிருக்கார்ன்னா, மது எதிர்ப்பிலே அவர் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்திருக்கார்னு புரியும். அப்படிப்பட்ட பெரியார் எங்க வீட்டு விருந்துக்கு வர்றது எங்களுக்குப் பெரிய பாக்கியம் இல்லீங்களா?” மூச்சு விடாமல் பேசினார் சத்யராஜ்.
“எங்க வீட்டுல வெச்சித்தான் பெரியாருக்கு விருந்து கொடுப்போம். நாங்க சாப்பிடற இடத்தில் அதே டைனிங் டேபிள்ல வாழை இலைபோட்டு அவருக்கு ரொம்பப் பிடித்தமான பிரியாணி பரிமாறுவோம். என் மனைவிதான் சமைப்பாங்க. கூடவே வெங்காயமும் வைப்போம். அவருக்குப் பிடிக்குதோ இல்லையோ… ஆனால், அடிக்கடி ‘வெங்காயம் வெங்காயம்’னு சொல்லுவாரே… அதனால் விருந்திலே கண்டிப்பா வெங்காயமும் இருக்கும். பெரியாரை எங்க வீட்டுக்குக் கூப்பிடறதுக்கு முன்னாடியே நான் சில விஷயங்களைப் பழகிக்கணும். முதல்ல மனைவியை ‘வாங்க போங்க’ன்னு மரியாதையா பேசக் கத்துக்கணும்… பெண்ணுரிமைக்காகப் போராடிய அவர் முன்னாடி மனைவியை ‘அடியே’ன்னு கூப்பிட்டால் பெரியார் கோவிச்சுக்குவார். ‘ஊருக்கு ஒண்ணு பேசறே. வூட்ல ஒண்ணா? போடா வெங்காயம்’னு சொல்லிடுவார். “என்னோட மகன் அவர் கையிலே பிடிச்சுக் கொடுத்து, “இவன் உங்களோட தீவிர இளம் தொண்டன்’னு சொல்லுவேன்!”
விருந்து மேஜையிலே, பெரியாருக்கு எதிரேதான் உட்காருவேன். அப்பத்தான் அய்யாவை நல்லா பார்க்க முடியும். சாப்பிடற நேரத்தில் எதுவும் பேசமாட்டேன். அது அவருக்கும் சங்கடம்… எனக்கும் சங்கடம்… என் வீட்டுலே பெரியார் படம் மாட்டியிருக்கேன். அவரோட சிந்தனைகள் உட்பட நிறைய புத்தகங்கள் வெச்சிருக்கேன். அதையெல்லாம் பெரியார்கிட்டே பெருமையா காட்டுவேன். எங்க வீட்டுல பூஜை அறை இருக்கு. அது எங்கம்மாவுக்காக. அம்மா சொல்லிச் சொல்லி என் மனைவியும் அப்பப்போ கும்பிட்டுக்குவாங்க.. நமக்கு அந்தப் பழக்கமெல்லாம் கிடையாது. ஆனாலும் மத்தவங்க உணர்வுகளைப் புண்படுத்த மாட்டேன். விசேஷங்களில் ஆளோட ஆளா நின்னுக்குவேன். விபூதி கொடுத்தால் வாங்கிப் பூசிக்குவேன். இதையெல்லாம் ஒளிவுமறைவு இல்லாம பெரியார்கிட்டே சொல்லிடுவேன். என் மகன் சிபி, பெரியார் கொள்கையிலே பிடிப்புள்ளவன். இயற்கையாவே அது அவனுக்கு அமைஞ்சிருக்கு. சாமி கும்பிடாமலே, பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்காமலே படிப்பில் கெட்டிக்காரனா இருக்கான். என் மகள் திவ்யா அவங்கம்மா மகேஸ்வரி டைப். நினைச்சா சாமி கும்பிட்டுக்குவா…
இல்லேன்னா இல்லே. எங்கம்மா நாகம்மாள் தீவிர பக்தை. வீட்டில் அவங்க பொங்கல் வைப்பாங்க. இவங்களையெல்லாம் பெரியாரிடம் அறிமுகப்படுத்திவைத்து, ஒவ்வொருத்தரோட குணாதிசயத்தையும் சொல்லுவேன்.
‘சீர்திருத்த சிந்தனைகளெல்லாம் உங்களப் பார்த்து நாங்க தெரிஞ்சுக்கிட்டோம். உங்களுக்கு அது எப்படி வந்தது? அதோட ஆரம்பம் என்ன?’ன்னு கேட்பேன். ‘உங்கள் கொள்கைகளை அடிப்படையா வெச்சிருக்கிற திராவிட இயக்கக் கட்சிகளெல்லாம் உடைஞ்சுக்கிட்டே போகுதே… அதுக்குக் காரணமென்ன?! கலர் கலரா கரை வேட்டியைக் கட்டிக்கிட்டுக் கோயிலுக்குப் போறாங்களே…. அவங்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?’ன்னெல்லாம் பெரியாரிடம் கேட்பேன்.
விருந்தோட முடிவில, அவர் கருத்துகளை எழுதிக் கையெழுத்துப் போட்டுக்கொடுக்கச் சொல்வேன். அவர் முதன்முதல்ல உபயோகித்த பேனா இருந்தால் அதைக் கேட்டு வாங்கிக்குவேன். அது இல்லேன்னா அவர்கிட்டேயிருந்து ஏதாவது ஒரு பேனாவை வாங்கி அவர் நினைவாகப் பத்திரமாகப் பாதுகாப்பேன்.
கடைசியா, தந்தை பெரியாரை வழியனுப்பறப்போ, என்னோட பதினோரு வயது மகன் சிபியை அவர் கையிலே பிடிச்சுக்கொடுத்து ‘இவன் உங்களோட தீவிர இளம் தொண்டன்னு சொல்லிப் பெருமைப்படுவேன். அய்யா பக்கத்திலே அவனை நிற்கவெச்சு போட்டோ எடுத்து அதைப் பெரிசா வீட்டில் மாட்டி வைப்பேன். இதைத் தவிர, ஒரு குரூப் போட்டோ…”
பெரியாரைப் பற்றிப் பேசப்பேச உணர்ச்சிமயமாகிக்கொண்டே போனார் சத்யராஜ். இதற்குள் ‘ஷாட்’ ரெடியாகிவிட, தனது சிவப்புக் கண்களால் நம்மை மணிவண்ணன் சுட்டெரித்துவிடாதிருக்க, அவசரமாக ‘டாட்டா’ சொன்னோம்.
– புல்லட் அங்கிள்
(வெங்காயமும் வைப்போம்! – பெரியாருக்கு டின்னர் தருகிறார் சத்யராஜ் என்ற தலைப்பில் 03.04.1994 தேதியில் ஆனந்த விகடன் இதழிலிருந்து…)