மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீது தற்கொலைப்படை தாக்குதல் திட்டமா?! – பாதுகாப்பு அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனா இரு அணிகளாக உடைந்த பிறகு அடிக்கடி இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன. வரும் 5-ம் தேதி தசராவையொட்டி மும்பையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும் தனித்தனியாக பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றன. இதனால் அடிக்கடி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெளியிடங்களுக்கு சென்றுகொண்டிருக்கிறார். இதில் ஏக்நாத் ஷிண்டே உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து மாநில உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஷிண்டேயின் பாதுகாப்பை பலப்படுத்தும் படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். அதோடு எங்கிருந்து மிரட்டல் வந்தது என்பது குறித்து விசாரிக்க உயர் மட்டக்கமிட்டி அமைக்கவும் உத்தரவிட்டு இருக்கிறார்.

முதல்வரின் அரசு இல்லம் மற்றும் அவரின் சொந்த வீடு ஆகியவற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநில உளவுத்துறை அதிகாரி அஷ்தோஸ், முதல்வரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை உறுதிபடுத்தியுள்ளார். முதல்வர் மீது தற்கொலைப்படைத்தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாக மற்றொரு அதிகாரி தெரிவித்தார். ஆனால் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து கவலைப்படவில்லை என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. இது போன்ற அச்சுறுத்தல்களை மாநில உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் போலீஸாரும் திறம்பட கையாளுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது போன்ற மிரட்டல்களை கண்டு இதற்கு முன்பு பயந்ததில்லை. இனியும் பயப்படப்போவதில்லை. நான் அமைச்சராக இருந்த போது நக்சலைட்கள் மற்றும் தேசவிரோத சக்திகளிடமிருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்தது. என்னை யாராவது கொலை செய்யவேண்டும் என்று நினைத்தால் அதில் வெற்றி பெறப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முதல்வர் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே புனேயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து உடனே போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீஸாரின் விசாரணையில் அவினாஷ் வாக்மாரே என்பவர் குடிபோதையில் இந்த மிரட்டலை விடுத்திருப்பது தெரிய வந்தது. போலீஸார் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று விசாரித்த போது அவினாஷ் ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. அவினாஷிடம் மேற்கொண்டு தகவல்களை கேட்க, போலீஸார் போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவினாஷ் போனை எடுத்து பேசவே இல்லை. இதையடுத்து அவரின் மொபைல் போன் சிக்னலை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தனர். அவர் தனியார் பஸ்ஸில் சாங்கிலி நோக்கி சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது.

காவல்துறை

உடனே உள்ளூர் போலீஸார் மூலம் அந்த பஸ் மடக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து அவினாஷ் கீழே இறக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹோட்டலில் தண்ணீர் அதிக விலைக்கு விற்பனை செய்ததால் அந்த ஹோட்டலை சிக்கலில் மாட்டிவிடும் நோக்கில் அவ்வாறு போன் செய்து கூறியதாகவும், போன் செய்த போது மது அருந்தி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸாருக்கு தவறான தகவல் கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதல்வரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதற்கு இந்த சம்பவமும் ஒரு காரணம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.