மத்திய மலையக பிரதேசத்தில் கடும் மழை :நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

காசல்ட்ரீ மற்றும் மௌசாகல நீர்த்தேக்க பிரதேசங்களில் நேற்று முதல் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக லக்சபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (03) அதிகாலை திறக்கப்பட்டுள்ளன.

நோட்டன் பிரிட்ஜ், விமல சுரேந்திர நீர்தேக்கத்தில் நேற்று முதல் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பெய்து வரும் கடும் மழையினால் காசல்ட்ரீ மற்றும் மௌசாகலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வழிந்தோடும் நீர்மட்டத்தை எட்டியிருப்பதாகவும் நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து கென்னியோன், லக்சபான, புதிய லக்சபான, பொல்பிட்டிய மற்றும் விமல சுந்தர ஆகிய நீர் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி நடவடிக்கைகள் உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்நது மழை பெய்யுமாயின் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் இதன் காரணமாக இந்த நீர்தேக்க தாழ்நில பகுதியில் உள்ளோர் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா உள்ளிட்ட வீதிகளில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. மழையுடன் இடையே கடும் காற்றும் வீசுவதனால் பல பிரதேசங்களில் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.