ஆறு துறைகளில் உலகில் தலை சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதில் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், மருத்துவம் ஆகிய துறைகள் அடங்கும். விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் பெயரில் வழங்கப்படும் இந்த பரிசில் ஒரு பதக்கம், சான்றிதழ், ரொக்கப் பரிசு ஆகியவை இடம்பெறும்.
இது சம்பந்தப்பட்ட நபர்களை மேலும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கும். உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் நடப்பு 2022ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு இன்று தொடங்கியுள்ளது. மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் நபரை தேர்வு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இவர் அழிந்து போன ஹோமினின்களின் மரபணுக்கள், மனித பரிணாமம் ஆகியவை குறித்து கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசை பெறவுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஆர்டம் பட்டாபுடியான் மற்றும் டேவிட் ஜுலியஸ் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது. இவர்கள் வெப்பநிலை மற்றும் தொடுதல் மூலம் உடலில் நடக்கும் மாற்றங்கள், தொடாமல் அறியும் உணரிகளை கண்டிபிடித்திருந்தனர்.
நோபல் பரிசானது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் பெயரால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் நோபல் பரிசு குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசிற்கு நார்வே நாட்டின் ஓஸ்லோவில் உள்ள நார்வேஜியன் நோபல் பரிசு குழு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சர்வதேச அகிம்சை தினம்: ஐ.நா., பொதுச் செயலாளர் வாழ்த்து!
இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 11 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். அவர்களில் சுதந்திர இந்தியாவில் 7 பேருக்கு கிடைத்துள்ளது. ஹர் கோபிந்த் கொரானா (மருத்துவம்), அன்னை தெரசா (அமைதி), சுப்ரமணியன் சந்திரசேகர் (இயற்பியல்),
அமர்தியா சென் (பொருளாதாரம்), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (வேதியியல்), கைலாஷ் சத்யார்த்தி (அமைதி), அபிஜித் பானர்ஜி (பொருளாதாரம்) ஆகியோர் ஆவர். இதில் கொரானா, சந்திரசேகர், ராமகிருஷ்ணன், பானர்ஜி ஆகியோர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் வேற்று நாட்டு குடிமக்களாக நோபல் பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.