புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கத்தை கண்டித்து திமுக-காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலைஅருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், காங்கிரஸ் எம்எல்ஏ வைத்திய நாதன், திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ. பொழிலன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்திய தொழிற் சங்க மையத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பத்மநாபன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், ‘‘புதுச்சேரி அரசுக்குச் சொந்தமான மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். உத்தரபிரதேசம், சண்டிகர், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் மத்திய அரசின் தனியார்மய முயற்சியை எதிர்த்து மக்கள் போராடியதால் அப்போராட்டம் கைவிடப்பட்டது. அதே போல், புதுச்சேரியி லும் போராட்டம் நடத்தி கைவிட செய்ய வேண்டும். புதுச்சேரி அரசின், மக்களின் சொத்துக்களை விற்பதற்கு யாருக்கும் உரிமை யில்லை.’’ என்றார்.
இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் சிவா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கப்படுவதில் பெரிய அளவிலான கையூட்டை பெற்று இதற்கு ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ளது. புதுச்சேரி மின்துறை லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது, தற்போது தனியார்மயமாக்க வேண்டியதன் அவசியம் என்ன? இதுகுறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும் மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிடும் வரை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்.’’என்றார். இதனையடுத்து, போராட் டத்தில் ஈடுபட்டோர் அண்ணா சாலை சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.