மும்பை: மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் இண்டிகோ விமானத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அந்த விமானத்தின் சேவை பாதிக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், ‘இண்டிகோ விமானம் 6இ 6045-ஐ வெடிகுண்டு வைத்துள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக மும்பை காவல்துறையிடம் புகார் அளித்தனர். அவர்கள், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506பி-ன் படி வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து அந்த விமானத்தை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் பரிசோதனை செய்தனர். இ-மெயில் வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக எவ்வித சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, கடந்த 1ம் தேதி மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரின் சோதனைகள் முடிந்ததும் விமானம் தொடர்ந்து இயக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.