நெமிலி : ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் நடைபெறும் மாபெரும் பனை விதைகள் நடவு திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு பணியில் ஈடுபட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்நாட்டின் மரமான பனை மர பரப்பினை அதிகரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்.அதேபோல தமிழ்நாட்டின் பசுமை பரப்பினை 33 சதவீதமாக உயர்த்தும் சீரிய பசுமை தமிழகம் திட்டத்தையும் அண்மையில் தொடங்கி வைத்தார்.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 50 லட்சம் பனை விதைகளை நட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 288 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களைக் கொண்டு பனை விதைகள் சேகரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இப்பணிகளை கலெக்டர் தன்னுடைய நேரடி பார்வையில் கடந்த இரண்டு மாதங்களாக கண்காணித்து வருகின்றார்.
முதல்வரின் உத்தரவின் படியும், அமைச்சர் ஆர்.காந்தியின் வழிகாட்டுதலின்படி இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 5 மணி நேரத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து 288 கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள 836 இடங்களில் இதற்கான குழிகள் தோண்டப்பட்டு தயார் நிலையில் உள்ள இடங்களில் சுமார் 50 லட்சம் பனை விதைகளை நட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடைபெறும் மாபெரும் பனை நடவு செய்யும் பணியினை அமைச்சர் ஆர்.காந்தி இன்ற காலை 8 மணியளவில் துவக்கி வைக்கின்றார்.
இந்த மாபெரும் பனை நடவு பணியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து பனை விதை நடவு பணிகளில் அந்தந்த கிராம பகுதிகளில் ஈடுபட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் நெமிலி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளிலும் பனை விதைகள் தயார் நிலையில் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருமால்பூர் ஊராட்சி மன்ற தலைவர் துலுக்கானம், மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள், அதேபோல் பள்ளுர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப், டெப்டி பிடிஓ பிஸ்மில்லா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.