வடலூர்: வடலூரில் உள்ள பாஜக நிர்வாகிக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மர்ம நபர்கள் யாராவது தீவைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கடலூர் மாவட்டம் வடலூர் நெய்சர் பட்டுசாமி தெரு தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜா (29). இவர் பாரதிய ஜனதா கட்சியின் வடலூர் நகர செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
வடலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்து பைப் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியையும் ராஜா நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு ராஜாவிற்கு சொந்த இடமான ஆர் கே சிட்டி பின்புறம் அமைந்துள்ள அந்தோணியார் கார்டனில் புதியதாக பிளாஸ்டிக் கம்பெனியை தொடங்குவதற்கு ஷெட் அமைத்து சிட்கோவில் இருந்த இயந்திரம் மற்றும் பிளாஸ்டிக் மறு சுழற்சிக்கான பொருட்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் இந்த பிளாஸ்டிக் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் ராஜாக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜா மற்றும் அக்கம் பக்கத்தினர் அருகில் இருந்த மின்மோட்டார் உதவியுடன் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக தெரியவந்துள்ளது.
இது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் கம்பெனி உரிமையாளர் ராஜாஅளித்த புகாரில், அடையாளம் தெரியாத சிலர் பிளாஸ்டிக் கம்பெனியை தீ வைத்து கொளுத்தி விட்டனர் என கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.