ஸ்டாக்ஹோம்-மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஆய்வு செய்துள்ள ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோ, 2022ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான அறிவிப்பு நேற்று துவங்கியது. இதில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு, ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வான்டே பாபோ, 67, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இரண்டு கால்களால் நடக்கத் துவங்கிய முதல் மனித குலத்தை, ‘ஹோமினியன்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
இதில் பல்வேறு வகைகளும் உள்ளன. முந்தைய ஹோமினியன்களுக்கும், தற்போதைய நவீன மனிதர்களுக்கும் இடையேயான தொடர்புகள் உள்ளிட்டவை குறித்த ஆய்வுகளை, பாபோ மேற்கொண்டார்.மனித பரிணாமம் தொடர்பான இவருடைய ஆய்வுகள், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி எப்படி வளர்ந்துள்ளது உள்ளிட்டவை குறித்து ஆராய்வதற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. இதையடுத்து, இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவருடைய தந்தை சுனே பெர்க்ஸ்ட்ராம், 1982ல் மருத்துவத்துக்கான நோபல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement