ஹிமாச்சல் செல்லும் பிரதமர் மோடி: எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்!

பிரதமர் மோடி வருகிற 5ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் செல்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். காலை 11.30 மணிக்கு பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் பிலாஸ்பூரிலுள்ள லுஹ்னு மைதானத்துக்கு மதியம் 12.45 மணிக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து பொதுநிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இதையடுத்து, பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்துக்கு செல்லும் பிரதமர் அங்கு தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அக்டோபர் 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை, பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் நிறுவப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும் விதமாக பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, 18 சிறப்பு மற்றும் 17 தனிசிறப்பு பிரிவுகள், 64 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் மொத்தம் 750 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. இந்த மருத்துவமனை 247 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்னமும் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.