சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 18 முதல் 59 வயது வரைஉள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டத்தை கடந்த ஜூலை 15-ம் தேதி மத்திய அரசு தொடங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 18முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
தமிழகத்தில் தினமும் அரசுமருத்துவமனைகளிலும், வாரந்தோறும் சிறப்பு மெகா முகாம்களிலும் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. மத்தியஅரசின் 75 நாட்கள் அவகாசம் நேற்றுடன் (செப்.30) நிறைவடைந்தது. இதனால், பூஸ்டர் தவணைதடுப்பூசியை இன்றுமுதல் தனியார்மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ளலாம். இது தொடர்பாக தமிழக பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, ‘‘18முதல் 59 வயதினருக்கு 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் நிறைவடைந்துள்ளது. கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் கேட்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசிடம்இருந்து எந்த தகவலும் வரவில்லை. அதனால், இன்றிலிருந்து பூஸ்டர்தவணை தடுப்பூசியை தனியார்மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ள வேண்டும். இனிமேல் புதன்கிழமைதோறும் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிமருத்துவமனைகளில் சிறப்பு முகாம் மூலம் கரோனா தடுப்பூசிஉட்பட 13 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படும். வியாழக்கிழமைதோறும் 12 முதல் 17 வயதினர்களுக்கு கரோனாதடுப்பூசி உள்ளிட்ட தடுப்பூசிகள் பள்ளிகளில் போடப்படும். மற்றநாட்களில் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்” என்றார்.