`பெண் சமத்துவத்துக்கு மரியாதை கொடுப்பவர்கள்தான் பண்புள்ள ஆண்கள்.’ – எழுத்தாளர் ஜெர்மையா சே (Jeremiah Say).
மேரி கே ஆஷ் (Mary Kay Ash)… இன்றைக்கும் அமெரிக்காவில் மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு பெண்மணியின் பெயர்.
மேரி, ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். அந்த நிறுவனத்தின் பெயர் `ஸ்டேன்லி ஹோம் புராடக்ட்ஸ்.’ வழக்கம்போல ஒரு தினம்… அதே சாலை… அதே மனிதர்கள்… சோர்வை மறைத்துக்கொண்டு சிரிப்பை உதிர்க்கும் அதே முகங்கள்! ஆனால், அன்றைக்கு அலுவலகம் அவர் அதுவரை பார்த்திராத வேறொரு முகத்தைக் காண்பித்தது. அலுவலகத்துக்குள் நுழைந்ததும், அவருடைய நண்பர் ஒருவர் பரபரப்பாக அவரிடம் வந்தார். “மேரி உனக்கு விஷயம் தெரியுமா?’’
“என்ன?’’
அவர் மற்றவர்களுக்குக் கேட்டுவிடாதபடி மெதுவான குரலில் சொன்னார்… “அந்தப் பையனுக்கு… அதான் உன் ஜூனியருக்கு புரொமோஷன் குடுத்து பெரிய போஸ்ட்ல உட்கார வெச்சுருக்காங்க. சம்பளமும் இப்போ வாங்குறதைப்போல ரெண்டு மடங்காம்…’’
இதைக் கேட்டதும் வெறுத்துப்போனார் மேரி கே ஆஷ். உண்மையில், அந்த இளைஞனுக்குப் பதவி உயர்வு கிடைத்ததில் அவருக்குப் பொறாமை இல்லை. இத்தனைக்கும் அந்த இளைஞன் அவரிடம்தான் பயிற்சி பெற்றவன். ஆனால், அவன் அவர் அளவுக்கு அனுபவம் இல்லாதவன். ரொம்ப நாள்களாக அவர் எதிர்பார்த்திருந்த பதவி அது. அது தட்டிப்போனது தாங்க முடியாததாக இருந்தது. `என்ன காரணமாக இருக்கும்… நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா… சரியாக வேலை செய்யவில்லையா… எனக்கு ஏன் அந்தப் பதவி கிடைக்கவில்லை?’ அவரால் மனஉளைச்சலைத் தாங்க முடியவில்லை.
தன் இருக்கையைவிட்டு எழுந்தார். நிறுவனத்தின் நிர்வாகி இருக்கும் அறைக்குப் போனார். தன் விரலால் கதவை லேசாகத் தட்டி, அனுமதி கேட்டுவிட்டு உள்ளே நுழைந்தார். நிர்வாகி, `என்ன…’ என்பதுபோல மேரியைப் பார்த்தார்.
மேரி நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “சார்… நம்ம கம்பெனியில 24 வருஷமா வேலை பார்த்திருக்கேன். எனக்கு ஏன் புரொமோஷன் தரலை?’’
“உங்களால ஒரு லிமிட்டுக்கு மேல அச்சீவ் பண்ண முடியலை…’’
“என்னோட பர்ஃபார்மென்ஸ்ல குறையா… என்ன குறை… கொஞ்சம் டீடெயிலா சொல்றீங்களா?’’
“அது… அது… அது மட்டும் இல்லை…’’
“அது மட்டும் இல்லைன்னா வேற என்ன?’’
“நீங்க ஒரு பெண்.’’
இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்துபோனார் மேரி. `பெண் என்பதாலேயே பதவி உயர்வு இல்லையா… இது என்ன அநியாயம்… இதற்கு மேலும் இங்கே வேலை பார்க்கத்தான் வேண்டுமா?’ அன்றைக்கே தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டார் மேரி. அவருக்கு பிரச்னைகளோ, கஷ்டங்களோ புதிதல்ல. ஆனால், நிறுவனம் ஏற்படுத்திய வலி தாங்க முடியாததாக இருந்தது.
1918-ம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹாட் வெல்ஸில் பிறந்தார் மேரி கே ஆஷ். அம்மா நர்ஸாகப் பணியாற்றிவந்தார். அண்மையில்தான் அவருக்கு ஒரு ரெஸ்டாரன்ட்டில் பதவி உயர்வு கிடைத்திருந்தது. அப்பா எட்வர்டு அலெக்ஸாண்டருக்கு எலும்புருக்கி நோய். படுக்கையிலேயே கிடந்தார். அம்மா வேலைக்குப் போனதும் மேரிதான் அப்பாவை அருகிலிருந்து பார்த்துக்கொள்வார். அம்மா வீடு திரும்பும்வரை அப்பாவைப் பார்த்துக்கொண்டபோது மேரிக்கு ஆறே வயது.
17 வயதில் பென் ரோஜர்ஸ் என்பவரை மணந்தார் மேரி. அவர் ஒரு ராணுவ வீரர். திருமணமான சில வருடங்களிலேயே இரண்டாம் உலகப்போர் வந்துவிட போருக்குக் கிளம்பிப் போய்விட்டார். அதற்குள் இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாகியிருந்தார் மேரி. உலகப்போர் முடிந்து பென் ரோஜர்ஸ் திரும்பி வந்தார். ராணுவத்திலேயே பணியாற்றியிருந்தாலும், அந்த வருமானம் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை. வறுமை, மனக்கசப்பைக் கொண்டுவந்தது. தம்பதிக்குள் பிணக்கு. ஒருகட்டத்தில் இனிமேல் சேர்ர்து வாழ முடியாது என்று முடிவெடுத்து, இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள்.
இதற்கிடையில் 1939-ம் ஆண்டே மேரிக்கு வேலை கிடைத்தது. `ஸ்டேன்லி ஹோம் புராடக்ட்ஸ்’ என்கிற அந்த நிறுவனத்தில் பணியாற்றுவது மேரிக்கு மிகவும் பிடித்திருந்தது. விற்பனைப் பிரதிநிதி வேலை. வீடு வீடாகச் சென்று வீட்டு உபயோகப் பொருள்களை விற்க வேண்டும். வாடிக்கையாளர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் எரிந்துவிழுவார்கள்; சிடுசிடுவெனப் பேசுவார்கள்; `உங்களை யார் காம்பவுண்டுக்குள் விட்டது?’ என்று கடுகடுப்பார்கள். அத்தனையையும் தாங்கிக்கொண்டு முகம் சுருக்காமல், சிரித்த முகத்தோடு, கனிவாகப் பேச வேண்டும். மாதா மாதம் நிறுவனம் நிர்ணயித்திருக்கும் டார்கெட்டை முடித்துவிட வேண்டும். இல்லையென்றால் வேலை காலி. அந்தச் சவால் மேரிக்குப் பிடித்திருந்தது. குழந்தைகளை கவனித்துக்கொண்டே அந்த சவாலையும் எதிர்கொண்டார்.
விவாகரத்துப் பெற்ற பிறகு, மேரி சி. க்ரௌலே (Mary C. Crowley) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் மேரி. வாழ்க்கை பெரிய மாற்றங்களில்லாமல், உப்புச்சப்பில்லாமல் போய்க்கொண்டிருந்தது. அந்தச் சூழலில்தான், 1963-ம் ஆண்டு ஸ்டேன்லி ஹோம் புராடக்ட்ஸிலிருந்து வெளியேறியிருந்தார்.
***
21 வயதில் சேர்ந்த வேலை. 24 ஆண்டுகள் வேலை பார்த்தாயிற்று. கையில் சேமிப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை. ஆனால், நம்பிக்கை மட்டும் இருந்தது. எதையாவது செய்து மேலே வந்துவிட முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை. பிரச்னையை அவர் விட நினைத்தாலும், அது அவரை விடுவதாக இல்லை. கணவர் க்ரௌலேயுடன் அன்றாடம் பிரச்னை. வேறு வழியில்லாமல் அவரையும் பிரிந்தார். பிறகு அவருக்கு வாழ்க்கைத்துணையாக வந்தவர், ஜார்ஜ் ஹாலன்பெக் (George Hallenbeck). அவருடனான இல்லற வாழ்க்கை மேரிக்குப் பல புதிய கதவுகளைத் திறந்துவிட்டது. அவர் இறுதிவரை தனக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருப்பார் என்கிற நம்பிக்கை பிறந்தது. தான் இதுவரை கற்றுக்கொண்ட தொழில் பாடங்களைவைத்து ஒரு புத்தகம் எழுதலாம் என முடிவு செய்தார் மேரி. தொழிலில் இறங்கும் பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் புத்தகம். அந்தப் புத்தகம் எழுதும்போதுதான் அவருக்கு `நாமும் ஏதாவது பிசினஸ் செய்யலாமே…’ என்கிற எண்ணமும் எழுந்தது. கணவருடன் பேசினார். இருவரும் சேர்ந்து புதிதாக ஒரு நிறுவனம் தொடங்குவது என முடிவெடுத்தார்கள். கையிலிருந்ததோ வெறும் 5,000 டாலர்! ஆனாலும், இறங்கிப் பார்த்துவிடுவது என முடிவெடுத்தார் மேரி.
1963. `மேரி கே காஸ்மெட்டிக்ஸ்’ (Mary Kay Cosmetics) நிறுவனத்தைத் தொடங்கினார் மேரி. டல்லாஸில் 500 சதுர அடியில் தொடங்கப்பட்ட நிறுவனம். தொடங்கி ஒரு மாதம்கூட இருக்காது. மறுபடியும் இடி வாழ்க்கையில் விழுந்தது. உறுதுணையாக இருப்பார் என்று நம்பியிருந்த ஜார்ஜ், ஹார்ட் அட்டாக்கில் இறந்துபோனார். மேரி அந்தப் பெரும் சோகத்தையும் மென்று விழுங்கினார். தொழில் தொடங்கியாயிற்று. தொடர்ந்து வண்டி ஓட வேண்டுமே… பிள்ளைகள் வளர்ந்திருந்தார்கள். மூத்த மகன் பென் ரோஜர்ஸ் ஜூனியரையும், இளைய மகன் ரிச்சர்டு ரோஜர்ஸையும் உதவிக்கு அழைத்தார். முதலில் ஒன்பது பெண்களை வேலைக்குச் சேர்த்தார். அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். தங்கள் நிறுவனத்தின் அழகுசாதனப் பொருள்களை எப்படி விற்பது, வாடிக்கையாளர்களை எப்படி அணுகுவது என்கிற பயிற்சி.
மேரி கே காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் முதலில் தங்கள் தோழிகளை அழைப்பார்கள். அவர்களுக்கு இலவசமாக ஃபேஷியல் உள்ளிட்டவற்றைச் செய்து அவர்களை அழகுபடுத்துவார்கள். பிறகு, `விருப்பப்பட்டால், எங்கள் அழகுசாதனப் பொருள்களை வாங்குகளேன்’ என்பார்கள். இந்த யுக்தி அபாரமாகக் கைகொடுத்தது. மேரி தன் நிறுவனத்தில் நிறைய பெண் பணியாளர்களைச் சேர்த்தார், பெண்களால் சாதிக்க முடியும் என்பதை இந்த உலகத்துக்கு நிரூபித்துக் காட்ட! அது நிஜமானது. அதற்குப் பிறகு மேரியின் வாழ்க்கையில் ஒரே ஏறுமுகம்தான்.
சில ஆண்டுகளிலேயே `மேரி கே காஸ்மெட்டிக்ஸ்’ பொருள்கள் அமெரிக்கா முழுக்கப் பிரபலமாகின. மெல்ல மெல்லப் பல நாடுகளுக்குள் அந்தப் பொருள்கள் நுழைந்தன. இன்றைக்கு `Mary Kay Cosmetics, Inc.’ உலகப் புகழ்பெற்ற நிறுவனம். வெறும் 5,000 டாலரில் ஆரம்பிக்கப்பட்டது, இன்றைக்கு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.
பெண்களால் முடியுமா? நிச்சயம் முடியும். எதையும் சாதிக்க முடியும். அதற்கு சாட்சியாக இருக்கிறது மேரி கே ஆஷின் வாழ்க்கை!