Prachand: மேட் இன் இந்தியா… IAFல் இணைந்த இலகுரக ஹெலிகாப்டர்!

Made in India எனப்படும் உள்நாட்டு தயாரிப்புகளை அதிகம் ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பாதுகாப்புத் துறையில் அதிநவீன ஆயுதங்கள், விமானப்படை ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தயாரித்துள்ள இலகுரக ஹெலிகாப்டர் அதிக உயரமான மலைப் பகுதிகளில் திறம்பட செயல்படக் கூடியது. இதற்கு ’பிரச்சாண்ட்’ (Prachand) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இன்று நடந்த நிகழ்வில் இலகுரக ஹெலிகாப்டரான பிரச்சாண்ட்டை இந்திய விமானப்படைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்த ஹெலிகாப்டர் 5.8 டன் எடையுடன் டபுள் இஞ்சின் கொண்டு செயல்படுகிறது. முன்னதாக பல்வேறு விதமான ஆயுதங்களை ஏவும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய விமானப்படையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு தாக்குதலில் ஈடுபடும் முக்கியத்துவம் வாய்ந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றாக பிரச்சாண்ட் செயல்படும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே லடாக்கில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது வானில் இருந்து வானிலேயே தாக்கும் வல்லமையும், வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமையும் பெற்றுள்ளது. மொத்தம் 95 பிரச்சாண்ட் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்திற்கு அளிக்கப்படவுள்ளன. அதில் 65 இந்திய விமானப் படையில் இணைந்து செயல்படும்.

அதிநவீன இலகுரக ஹெலிகாப்டரான துருவ் போன்ற வடிவமைப்பை பிரச்சாண்ட் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு நேரங்களிலும், வனப் பகுதிகளிலும் குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது. தாக்குதலை சமாளிக்கும் வகையில் சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. அனைத்து வானிலையிலும் செயல்படக் கூடியது. மெதுவாக பறக்கும் விமானங்கள், ரிமோட் இயக்கும் விமானங்களுக்கு எதிராக பிரச்சாண்டை பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.