விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்த கொள்ளையர் ஒருவர் சிசிடிவியில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, தலையில் பிளாஸ்டிக் டபராவை கவிழ்த்துக் கொண்டு சென்று ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சூப்பர் மார்க்கெட்டை இரவில் மூடிவிட்டு காலை வழக்கம்போல் கடையை திறந்து பார்த்தபோது . கடை கல்லாவிலிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ருபாய் பணம் திருடு போனதையடுத்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
கடைக்கு வந்து விசாரித்த போலீசார் கொள்ளையனை அடியாளம் காண அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி காத்திருந்தது உடல் முழுவதும் லுங்கி மற்றும் சாக்கு கொண்டு போர்த்திய நிலையில் தலையில் பிளாஸ்டிக் டபராவை கவிழ்த்துக் கொண்டு ஏலியன் போல ஒரு உருவம் கடைக்குள் வலம் வந்தது.
கையில் டார்ச் லைட்டுடன் ஒவ்வொரு இடமாக வலம் வந்த அந்த டபரா தலை கொள்ளையன், சரியாக கல்லாவை நெருங்கியதும் காலால், மிதித்து திறந்து கல்லாவிற்குள் இருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை மொத்தமாக களவாடிச்சென்றான்
சிசிடிவி இருந்தால் போதும் லட்டு மாதிரி திருடர்களை பிடித்து விடலாம் என்று வந்த போலீசாரோ, ஏலியன் போல வந்து தப்பிச்சென்ற அந்த கொள்ளையனை கடைக்கு வெளியில் பொறுத்தப்பட்ட சிசிடிவி மூலம் அடையாளம் காணமுயன்றனர்.
சாக்குப்பையை தலையில் போர்த்தியபடி கடையின் மேல்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சிசிடிவிக்கே டஃப் கொடுத்ததால் அவனை அடையாளம் காண முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.
சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அந்த பணத்தை பத்திரமாக பூட்டி வைத்திருந்தால் இந்த திருடனால் எளிதாக திருடிச்சென்றிருக்க இயலாது என்று கூறும் போலீசார் கொள்ளையனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இவ்வளவு களேபாரத்துக்கும் இடையே அந்த கடையில் பொருட்கள் வாங்க வாடிக்கையாளர்கள் வரிசை கட்டி நின்றது குறிப்பிடதக்கது.