இரவு நேரத்தில் ஏரியிலிருந்து திருட்டுத் தனமாகச் சவுடு மண் எடுக்கிறார்கள் என்று இளைஞர்களும், பொதுமக்களும் சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூரில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பாப்பான் ஏரி மற்றும் ஊராட்சிக்குச் சொந்தமான ஆண்டி ஏரியிலிருந்து வண்டல் மண் எடுப்பதாகக் கூறி தினந்தோறும் இரவு நேரங்களில் கிராவல் மண் எடுத்து லாரி மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளுக்குப் புகார்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதோடு புகார் கொடுப்பவர்களின் பெயர்களையும் வெளிப்படையாகச் சொல்வதால், அவர்கள் புகார் கொடுப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில், மேலப்பழூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மணல் விவகாரம் தொடர்பாகப் புகார் மனு அளித்தனர்.
புகார் கொடுத்த இளைஞர்கள் தரப்பில் பேசினோம். “இரண்டு ஏரிகளிலும் அரசு அனுமதியின்றி தினமும் இரவு நேரங்களில் லாரி மூலம் கிராவல் மண் எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இது குறித்து ஊர் பொதுமக்கள் சிலர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் அவர்கள் சம்பந்தப்பட்டவரிடம் சொல்லிவிடுகிறார்கள்.
அவர்களோ, `எங்களையே போட்டுக்கொடுக்கும் அளவுக்கு உனக்குத் துணிச்சல் வந்துவிட்டதா… நீ எப்புடி உயிரோட இருக்குறேன்னு பார்ப்போமா’ என்று புகார் கொடுத்தவரை மிரட்டும் அளவுக்குச் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள். திருட்டுத்தனமாக கிராவல் மண் எடுக்கும் கும்பல் போலீஸார் முதல் அதிகாரிகள் வரை பலருக்கு மாதாமாதம் கப்பம் கட்டுவதால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இதனைத் தடுக்கவேண்டும் என்பதால்தான் நாங்கள் ஒரு முடிவு செய்தோம். ஒரு நபர் புகார் கொடுத்தால் தானே மிரட்டுவார்கள். ஊர் பொதுமக்களே சேர்ந்து சிசிடிவி ஆதாரத்தோடு புகார் கொடுத்தால் என்ன செய்வார்கள்? அனுமதியின்றி கிராவல் மண் அள்ளுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இதுவரை அவர்கள் விற்பனை செய்த கிராவல் மண்ணுக்கான இழப்பீடு தொகையையும் வசூலிக்க வேண்டும். இத்தனை ஆதாரங்களோடு புகார் கொடுத்திருக்கிறோம். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் வேறு விதமாக இருக்கும்” என்றனர்.