ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் போட்டியில் இன்று (04) ஐக்கிய அரபு அமீரக அணிக்கும், இந்திய பெண்கள் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ளது.
ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்று உள்ள இந்தத் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நேற்று (03) மலேசியா அணியை எதிர்கொண்டது.
நாணய சுழற்சியை வென்ற மலேசிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பாட்டத்தில் இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்களை பெற்றது.
இதன்பின்னர் 182 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மலேசிய அணி 5.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 16 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்த தொடரில் இந்திய பெண்கள் அணி 2 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் இலங்கையை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.