ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையோரம் இருக்கும் பெனுகுண்டாநகரில் 125 ஆண்டுகள் பழைமையான வசாவி கன்யாகா பரமேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயில் தசராவையொட்டி பணம் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மகாலட்சுமியின் அவதாரமாகக் கருதப்படும் பரமேஸ்வரி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பரமேஸ்வரி அம்மன் 6 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.3.5 கோடியாகும். கோயில் சுவர் மற்றும் தரைகூட ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயில் முழுக்க பணமாகவே காணப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தசராவின் போது தங்கம் மற்றும் பணத்தால் அலங்கரிக்கப்படுவது பாரம்பரியமாக நடந்து வருகிறது. கோயில் முழுக்க 4.50 கோடி ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இக்கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பக்தர்கள் வருவது வழக்கம். அதோடு அவர்கள் தங்கம் மற்றும் பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவர்.
கோயிலில் அலங்காரத்திற்கு வைக்கப்பட்டு இருக்கும் பணம் முழுக்கவே பூஜை செய்து திரும்பக் கொடுக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே பக்தர்கள் கொடுத்திருக்கின்றனர். எனவே தசரா முடிந்தவுடன் இப்பணம் கோயில் அறக்கட்டளைக்குச் செல்லாது. யார், யார் பணம் கொடுத்தார்களோ அவர்களிடமே பணம் திரும்பக் கொடுக்கப்பட்டு விடும். முன்கூட்டியே மக்கள் கோயிலில் பணத்தைக் கட்டி விட்டு சீட்டு வாங்கிக்கொள்ளவேண்டும். விழா முடிந்தவுடன் அந்த சீட்டைத் திரும்பக் கொடுத்து பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நடைமுறை ஆரம்பத்தில் ரூ.11 லட்சத்தில் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பக்தர்கள் கொடுக்கும் பணத்தைக் கோயிலுக்குள் வைக்க இடமில்லாமல் மரங்கள் மற்றும் மின் விசிறியில் கூட கட்டி தொடங்கவிட்டுள்ளனர். தசராவிற்கு இக்கோயிலில் தங்கம் மற்றும் பணம் கொடுத்து பூஜை செய்து வாங்கினால் அதிர்ஷ்டம் என்றும், தொழில் பெருகும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.