ஜோத்பூர்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘பிரசாந்த்’ போர் ஹெலிகாப்டர், விமானப் படையில் சேர்க்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) ‘பிரசாந்த்’ எனப்படும் இலகுரக போர் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது. இது 5.8 டன் எடையுள்ள இரட்டை இன்ஜின் ஹெலிகாப்டர் ஆகும். ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதங்களை இதில் பொருத்தி துல்லியத் தாக்குதலை நடத்தமுடியும். உயரமான மலைப் பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான அம்சங்களுடன் இந்த ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து வானிலையிலும் இயங்கும். இரவிலும், வனப் பகுதிகளிலும் பயன்படுத்தலாம். இந்த ஹெலிகாப்டரில் பல்வேறு வகையான ஆயுதங்களை பொருத்தி ஏற்கெனவே பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ‘பிரசாந்த்’ இலகு ரக போர் ஹெலிகாப்டர், முறைப்படி நேற்று இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது. இதற்கான விழா ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில், ‘பிரசாந்த்’ இலகு ரக போர் ஹெலிகாப்டரை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர், அதில் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய
அவர், ‘‘இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக உருவாக்குவோம் என்பதே நம் குறிக்கோள். இந்த ஹெலிகாப்டரை உருவாக்கியதன் மூலம் பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவின் திறனை உலக நாடுகளுக்கு பறைசாற்றியுள்ளோம்’’ என்றார்.