புதுடெல்லி: டெல்லி பிரகதி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கிவைத்தார். அந்த நிகழ்வில், இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்வில் பேசிய ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், இந்தியாவில் 4ஜி சேவையை வேகமாக கொண்டு சேர்த்ததற்காக முகேஷ் அம்பானியைப் பாராட்டினார். “முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 4ஜி-யை வேகமாக கொண்டு சேர்த்தது. அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க நாங்களும் ஓட வேண்டியதாக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும், தொழில்நுட்பம் சார்ந்து பிரதமர் மோடியின் அணுகுமுறையையும் சுனில் மிட்டல் பராட்டினார்.
“தொழில்நுட்பத்தை உன்னிப்பாக புரிந்துகொள்ளும் ஒரு தலைவர் நம்மிடம் இருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். பல தலைவர்கள் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியைப் போல் வேறு எவராலும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை நுணுக்கமாகப் புரிந்து, அதை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த முடியாது” என்று அவர் கூறினார்.