மலாங்: இந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் மலாங் நகரில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் கலவரம் ஏற்பட்டது. போலீஸாருக்கும், தோல்வியடைந்த அணியின் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 187 பேர் உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிஃபாவின் தரவரிசைப் பட்டியலில், கிழக்காசிய நாடான இந்தோனேசியா 155-வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டுகளில் கால்பந்து முதலிடத்தில் உள்ளது. தேசிய மற்றும் உள்ளூர் அளவில் ஆண்டு முழுவதும் கால்பந்துப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தோல்வியால் ரசிகர்கள் ஆத்திரம்
இதில், இந்தோனேசிய கால்பந்துக் கூட்டமைப்பு (பிஎஸ்எஸ்ஐ) சார்பில் நடத்தப்படும் ‘லிகா 1’ என்ற போட்டி மிகவும் பிரபலமானது. கிழக்கு ஜாவா மாகாணம், மலாங் நகரில் அமைந்துள்ள கன்ஜுருஹன் மைதானத்தில் நேற்று முன்தினம் ‘லிகா 1’ கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இதில், அரேமா அணியும், பெர்சிபயா சுரபயா அணியும் மோதின.
இந்தப் போட்டியில் பெர்சிபயா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் ஆத்திரமடைந்த அரேமா அணியின் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து, வன்முறையில் ஈடுபட்டனர்.
வெற்றி பெற்ற பெர்சிபயா சுரபயா அணியின் வீரர்களைத் தாக்குவதற்காக, அவர்களைத் தேடி அலைந்தனர். போலீஸார் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு, அந்த அணி வீரர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பெர்சிபயா அணி வீரர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அரேமா ரசிகர்கள் வன்முறையில் இறங்கினர். போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, போலீஸாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, தடியடிநடத்தினர். ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து கிழக்கு ஜாவா மாகாண துணை ஆளுநர் அமில் தர்டாக் கூறியதாவது:
கன்ஜுருஹன் மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சுகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விசாரணைக்கு அதிபர் உத்தரவு
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ கூறியதாவது: கன்ஜுருஹன் மைதான கலவரம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், `லிகா 1′ கால்பந்துப் போட்டியை நிறுத்த உத்தரவிட்டுள்ளேன். இதுதான் நமது நாட்டில் நடைபெற்ற கடைசி கால்பந்து கலவரமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஃபிஃபா அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ கூறும்போது, “கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இது கால்பந்து வரலாற்றில் ஒரு கருப்பு தினம். ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
கலவரத்துக்கு காரணம் என்ன?
கலவரத்துக்கான காரணம் குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கன்ஜுருஹன் மைதானத்தில் 38,000 பேருக்கு மட்டுமே இருக்கை வசதிகள் உள்ளன. இந்த வரம்பை மீறி 42,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. அரேமா அணி, பெர்சிபயா சுரபயா அணிக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில், அரேமா அணி உள்ளூர் அணியாகும். பெர்சிபயா அணி, கிழக்கு ஜாவா தலைநகர் சுரபயாவைச் சேர்ந்தது.
கன்ஜுருஹன் மைதான கால்பந்துப் போட்டிகளின் போது பலமுறை வன்முறை, கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் அணியான அரேமா ரசிகர்களுக்கே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் கன்ஜுருஹன் மைதானத்தில் அரேமா அணியே வெற்றி பெறும். ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் எதிர்பாராதவிதமாக பெர்சிபயா அணி வெற்றி பெற்றதால், அரேமா அணி ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் மைதானத்தில் குவிந்து, வன்முறையில் ஈடுபட்டதால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது’’ என்றனர்.
நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஆல்பியான் நூர் கூறும்போது, ‘‘கால்பந்து விளையாட்டுப் போட்டிகளின் போது கலவரம் ஏற்பட்டால், கண்ணீர் புகைகுண்டுகளை வீசக்கூடாது என்று சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிஃபா அறிவுறுத்தி உள்ளது. ஆனால், கன்ஜுருஹன் மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, போலீஸார் கண்மூடித்தனமாக கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, தடியடி நடத்தி உள்ளனர். கலவரத்தில் சிக்கிய பெரும்பாலானோர் மூச்சுத் திணறலால் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கு, கூட்ட நெரிசல், கண்ணீர் புகைகுண்டுகளே முக்கியக் காரணமாகும். கண்ணீர் புகைகுண்டில் 3 விதமான ரசாயனங்கள் உள்ளன. அவற்றை அளவுக்கு அதிகமாக சுவாசித்தால், உயிரிழப்பு ஏற்படும்.
கலவரத்தில் உயிரிழந்தோரில் ஏராளமான குழந்தைகளும் உள்ளனர். கண்ணீர் புகைகுண்டு காற்றை சுவாசித்ததால் அந்தக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்’’ என்றார்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கலவரத்தைக் கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றோம். ஆனால், கால்பந்து ரசிகர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். காவல் துறையின் 13 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இரு போலீஸார் கொல்லப்பட்டனர். வேறுவழியின்றி கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தினோம்’’ என்றனர்.