விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வருவாய் துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி துறையின் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஊட்டச்சத்து மற்றும் வளைகாப்பு பொருட்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து வருவாய் துறை சார்பில் 141 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், மின்னணு குடும்ப அட்டை, ஆதரவற்ற விதவை சான்று, சாலை விபத்து, நிவாரண உதவித் தொகை என, ரூ.20,29,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “வீட்டில் வளைகாப்பு நடத்த முடியாதவர்களுக்கு சகோதரனாக இருந்து முதல்வர் வளைகாப்பு நடத்துகிறார். பிரச்சனை இல்லாத வீடுகள் இல்லை. பிரச்சினையை தள்ளிவிட்டு பிரசவ காலத்தில் நல்ல மனநலத்துடன் இருக்க வேண்டும்.
அப்போதான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். பெண்கள் தான் அனைத்து போட்டிகளிலும் ஜெயிக்கிறார்கள். எந்த குழந்தையாக இருந்தாலும் அது நம்முடைய குழந்தை. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு எனக்கு வாக்களித்துள்ளீர்கள். உங்களை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
இதுவரை 4 லட்சத்து 92 ஆயிரம் முதியோருக்கு பென்ஷன் வழங்கியுள்ளோம். ஆனால், முதியோர் பென்ஷன் வாங்குபவர்களை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறோம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு திட்டத்துக்கு தகுதியில்லாதவர்களை நீக்கம் செய்வது அனைத்து ஆட்சியிலும் நடக்கும் வழக்கமான நடைமுறைதான்.
இருப்பினும், தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஓய்வூதியதாரர்கள் குறித்து மீண்டும் களஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில், தகுதி பெறும் அனைவருக்கும் மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்படும். எல்லோருக்கும் எல்லாம் வழங்கக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி” என்று தெரிவித்தார்.