நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்திலிருந்து 28 பேர் கொண்ட குழு ஒன்று உத்தரகாண்ட் மாநிலம், கர்வாவில் கங்கோத்ரி மலைத்தொடரின் திரௌபதி தண்டா உச்சியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் அந்தக் குழு சிக்கியது. இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்துடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளும், ராணுவ வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் இந்திய விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதுவரை 8 பேர் மீட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் புஷ்கர் சிங் தாமி மீட்புப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். மேலும், மீட்புப்பணிகளில் ராணுவ வீரர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியதாக முதல்வர் தெரிவித்தார். மீட்புப் படையினர் முழு வீச்சில் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.