என் ரூட்டே வேற… பெரிய சம்பவத்திற்கு ரெடியான சசிதரூர்- காங்கிரஸில் புதிய ட்விஸ்ட்!

நாட்டின் மூத்த அரசியல் கட்சியாக திகழும் அகில இந்திய
காங்கிரஸ்
கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ஆம் தேதி நடக்கவுள்ளது. 19ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான போட்டியில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவர் மட்டுமே நிற்கின்றனர்.

இவர்களில் மூத்த தலைவராக இருக்கும் கார்கேவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் முழு மூச்சாக போட்டியில் இறங்கியுள்ளதாகவும், ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் சசிதரூர் தெரிவித்துள்ளார். இருவரும் ஒவ்வொரு மாநிலமாக சென்று காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில் தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கு சசிதரூர் சென்றுள்ளார்.

ஏற்கனவே கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சுதாகரன் அவர்கள், தனது ஆதரவை மல்லிகார்ஜுன கார்கேவிற்கு வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். இதனால் மற்ற நிர்வாகிகளிடம் சசிதரூர் ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிதரூர், நாக்பூர், வார்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தேன். அவர்கள் தான் என்னை தேர்தலில் போட்டியிட அறிவுறுத்தினர்.

மேலும் போட்டியில் இருந்து பின்வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். எனவே நானும் உறுதி அளிக்கிறேன். என்னுடைய நோக்கத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் எனக் கூறினார். தொடர்ந்து பேசுகையில், கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆதரவு திரட்டப் போவதில்லை. அவர்களிடம் நான் ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை. இளைஞர்கள் தான் என்னுடைய இலக்கு.

ஏனெனில் கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்கள், அடுத்த இயங்கு சக்தியாக இளைஞர்கள் தான் இருக்கின்றனர். அவர்களிடம் தான் ஆதரவு திரட்டவுள்ளேன். அதேசமயம் என்னை நம்பி வந்தவர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். அவர்களின் நம்பிக்கை தான் என்னை உத்வேகத்துடன் இயங்கச் செய்கிறது என்று கூறினார். கார்கேவிற்கு சுதாகரன் ஆதரவளித்தது பற்றிய கேள்விக்கு, அடுத்தவர்கள் மனதில் இருப்பதை நம்மால் கணிக்க முடியாது.

ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யாராக இருந்தாலும் கருத்தை வெளிப்படையாகவும் சொல்லலாம். சொல்லாமல் இருக்கலாம். ஆனால் வாக்கு என்பது ரகசியமாக தான் பாதுகாக்கப்படும். யார் யாருக்கு வாக்களிக்கப் போகிறார் என்று நம்மால் கூற இயலாது. அவரவர் நம்பிக்கை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தான் வாக்களிப்பர். யாரால் இந்த கட்சியை வலுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்களோ? அவர்களுக்கு வாக்களிப்பர். நாம் தான் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று சசிதரூர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.