தர்மபுரி மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரம்பி வருவதை வேடிக்கை பார்க்க சென்ற ராணுவ வீரர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் நந்தகுமார் (21). இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நந்தகுமார் சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று ஏரிகளில் நீர் நிரம்பி வருவதை வேடிக்கை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்பொழுது அதியமான் பைபாஸ் சாலையில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த நந்தகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தர்மபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.