விருதுநகர் தாலுகாவுக்குட்பட்ட கூரைக்குண்டு ஊராட்சியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து தினசரி வேலைக்காகவும், பள்ளிக்குச் செல்வதற்காகவும் ஏராளமானோர் விருதுநகருக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலும் இங்குள்ள மக்கள் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை தொழிலையே சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சுமார் 1.50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூரைக்குண்டு ஊராட்சிக்கு விருதுநகரிலிருந்து எந்தவித பஸ் வசதியும் இதுவரை செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கூரைக்குண்டு ஊராட்சியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவிற்கு பதில் அனுப்பிய அதிகாரிகள், “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கூரைக்குண்டு ஊருக்கு செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை இருப்பதால் அதன் வழியே கனரக வாகனங்களை இயக்க முடியாது. எனவே கூரைக்குண்டு ஊராட்சிக்கு அந்த வழித்தடத்தின் வழியே பேருந்து வசதி ஏற்படுத்தி தர முடியாத நிலை இருக்கிறது” எனக் கூறியுள்ளனர். இந்த பதில் கடிதத்தை பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர், அதிகாரிகளின் இந்த பதில் வேடிக்கையாக உள்ளதென குற்றச்சாட்டுகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய மகளிர் சுய உதவிக் குழுவினர், “அதிகாரிகள் சொன்ன அதே ரயில்வே சுரங்கப்பாதை வழியாகத்தான் தனியார் தொழிற்சாலை பணியாளர் பேருந்து, கல்லூரி பேருந்துகள், ஜே.சி.பி., தொழிற்சாலைக்குச் செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் எல்லாம் வந்து செல்கின்றன. இந்த நிலையில் அரசு பஸ் மட்டும் அவ்வழியாக வர முடியாது என காரணம் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை” என்றனர்.
ஊர் மக்களின் இந்த குற்றச்சாட்டு குறித்து விருதுநகர் போக்குவரத்து உதவி மேலாளர் (வணிகம்) மாரிமுத்துவிடம் பேசினோம், “கூரைக்குண்டு ஊராட்சிக்குச் செல்லும் பாதையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையின் வழியாக அரசு பேருந்துகளை இயக்க முடியாது என்பது உண்மைதான். எனவேதான், அந்த ஊருக்கு 2 தனியார் மினிபஸ்கள் 44 சர்விஸ் இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழியில் பஸ் சர்விஸ் இயக்கவில்லை எனச் சொல்கிறார்கள். மேலும், ரயில்வே சுரங்கப்பாதை இருக்கும் அவ்வழியே கல்லூரி பேருந்துகள், தனியார் பேருந்துகள் உள்ளிட்டவை சென்று வரலாம். ஆனால் அது அரசுப் பேருந்துகளின் அளவுக்கு அளவில் பெரியதாக இருக்காது. அரசுப் பேருந்துகள் உயரத்திலும், அகலத்திலும் அதிகம் என்பதால் சுரங்கப்பாதையின் வழியாக சென்று வர முடியாது. இருந்தாலும் பொதுமக்களின் கோரிக்கையை கணக்கிலெடுத்து, புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்கும் பட்டியலில் கூரைக்குண்டு ஊராட்சியை இணைத்து பஸ் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.