காங்கிரஸ் தலைவர் தேர்தல் – வழிகாட்டு நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை ஒட்டி வழிகாட்டு நெறிமுறைகளை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற இருக்கிறது. வரும் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கேவும், சசி தரூரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். 9,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை கட்சியின் அதிகாரபூர்வ தேர்தல் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

  • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், செயலாளர்கள், இணை செயலாளர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், துறைகளின் தலைவர்கள், அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட விரும்புபவர்கள் முதலில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிறகு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம்.
  • தேர்தலில் போட்டியிடுபவர்கள் வாக்காளர்களைச் சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்ய, பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தேவையான ஏற்பாடுகளை, அதாவது கூட்ட அரங்கு, இருக்கைகள், மைக்குகள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தர வேண்டும். அதேநேரத்தில், கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கக்கூடாது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள்தான் அழைப்பு விடுக்க வேண்டும்.
  • தேர்தலில் போட்டியிடுபவர்கள், தேர்தலின்போது வாக்குகளை பதிவு செய்ய வரும் வாக்காளர்களுக்கு வாகன ஏற்பாடுகளையோ, தங்குவதற்கான ஏற்பாடுகளையோ செய்யக்கூடாது.
  • தேர்தலுக்காக விரும்பத்தகாத பிரசுரங்களை வெளியிடக்கூடாது. கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலோ, உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலோ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது.
  • விதிகள் மீறப்படுமானால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ் கட்சியின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை சசி தரூர் வரவேற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியின் தொழில்முனைவோர் பிரிவின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.