சென்னை: காரைக்கால் வானொலியில் இந்தி திணிப்பு ரத்து செய்யப்பட்டிருப்பது பாமகவின் போராட்ட எச்சரிக்கைக்கு கிடைத்த பயன் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ”அகில இந்திய வானொலியின் காரைக்கால் நிலையத்திலிருந்து கடந்த 2-ஆம் தேதி முதல் தினமும் 4 மணி நேரம் ஒலிபரப்பப்பட்டு வந்த இந்தி நிகழ்ச்சிகள் நேற்றிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தித் திணிப்பை பிரசார் பாரதி நிறுவனம் கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
காரைக்கால் வானொலி மூலமான இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது கைவிடப்படாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து இந்தி நிகழ்ச்சிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
வானொலி நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். இதை உணர்ந்து இனி வரும் காலங்களில் இந்தித் திணிப்பு முயற்சிகளில் பிரசார் பாரதி நிறுவனம் ஈடுபடக்கூடாது.” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.