விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். கொசு ஒழிப்பு தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்ததாகக் கூறப்படும் இவர், கடந்த மாதம் 23-ம் தேதி ராதாபுரம் பகுதியில் கொசு ஒழிப்பு மருந்தடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கொசு மருந்தடிக்கும் இயந்திரம் வெடித்து தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கடந்த 20 தினங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் உடல் சொந்த ஊரான ராதாபுரத்திற்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த கோவிந்தனின் உடலை விழுப்புரம் – புதுவை சாலையில் (ராதாபுரம்) வைத்து அவர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, விழுப்புரம் டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், ‘உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என கோவிந்தனின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த நிலையில், இன்று காலை கோவிந்தனின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாயும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பாக ஒரு லட்சம் ரூபாயும் என மொத்தம் 2 லட்சம் ரூபாயை அவர் குடும்பத்தாரிடம் வழங்கினார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் உறுதியளித்து சென்றுள்ளார்.