கோவை: மாநகராட்சி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டது.
கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ஆட்சியர் அறிவித்த ரூ.721-ஐ வழங்க வேண்டும். கூலி உயர்வு, பணி நிரந்தரம் உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர், கடந்த 2ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். கோவை மாநகரில் 3,500 தூய்மைப் பணியாளர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் பேர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல பொள்ளாச்சியிலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மேயர் கல்பனா, ஆணையர் பிரதாப் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஊதிய உயர்வு குறித்து மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.