அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இருப்பினும் வழக்கமான பீரியட் படங்களைப் போல் புல்லரிக்க வைக்கும் அதிரடி காட்சிகள், ஆச்சரியமளிக்கும் மிகைபடுத்தப்பட்ட VFX காட்சிகள் போன்றவை இப்படத்தில் இல்லை என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரைக்கதை, வசனத்தில் பணியாற்றிய எழுத்தாளர் ஜெயமோகன் படத்தின் மீது வைக்கப்படும் இதுபோன்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.
இது பற்றி தனது இணையத்தளபக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பொன்னியின் செல்வன் திட்டமிடப்படும்போதே ஒரு செயற்கையான தொழில்நுட்பப் படமாக அமையக்கூடாது, முழுக்க முழுக்க யதார்த்தமாகவே இருந்தாகவேண்டும் என வரையறை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. வரைகலைத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் படங்கள் முதல்பார்வைக்கு ஒரு பிரமிப்பை உருவாக்கினாலும் ஓராண்டிலேயே கேலிப்பொருளாக ஆகிவிடும். இது வரலாறு, இது அப்படி ஆவது என்பது நமக்கே நாம் இழிவு தேடிக்கொள்வது.
வரைகலை நுட்பம் (special effects) சில ஆண்டுகளில் பழையதாகிவிடும். மிகையாக இருந்தால் வேடிக்கையாக மாறிவிடும். இந்தப்படம் இருபதாண்டுகளாவது outdate ஆகக்கூடாது, அடுத்த தலைமுறை பார்க்கவேண்டும் என்றார் மணி ரத்னம். ஆகவே யதார்த்தத்தை உருவாக்குவதற்காக மட்டுமே வரைகலை பயன்படுத்தப்பட்டுள்ளதே ஒழிய மிகையாகக் காட்டுவதற்காக அல்ல. போர் உட்பட எதுவுமே மிகையாக்கப்படவில்லை.
காட்சிகளில் மிகைநாடகத் தன்மை, மிகைசாகசத் தன்மை வந்துவிடவே கூடாது என உறுதியாக இருந்தார். நான் எழுதியதிலேயே இருந்த சற்று மிகையான ‘ஹீரோயிசக்’ காட்சிகள் ஒவ்வொன்றாக தேடித்தேடி அகற்றினார். இதில் கூஸ்பம்ப்ஸ் எல்லாம் இருக்காது. இது ஒரு சீரான ஒழுங்கு மட்டுமே.
இது மணி ரத்னத்தின் கனவு. அது காலத்தில் நீடித்து நிற்கவேண்டும் என்றார்.இன்று பார்ப்பவர்களில் எளிமையான ஒரு சாரார் வழக்கமான வரைகலை உத்திகளில் செய்யப்படும் நம்பமுடியாத சாகசங்களை எதிர்பார்த்து ஏமாற்றமடையலாம். ஆனால் மறுபடியும் பார்ப்பவர்களால் படம் காலத்தை கடக்கவேண்டும் என்று எண்ணினார். அது நிகழ்கிறது. குறிப்பாக பெண்களின் திரளால்.
அந்தப் புள்ளியில் `பொன்னியின் செல்வனின்’ தனித்துவத்தை அடையாளப்படுத்தி, அதனாலேயே இது இந்திய சினிமாக்களில் முதற்பெரும் வெற்றி என மதிப்பிடும் இந்த விமர்சனக் கட்டுரை மலையாளத் திரைவிமர்சன மரபு பற்றி நான் என்றும் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது”