சென்னை விமான நிலையத்தில் ரூ.8.3 கோடி மதிப்புள்ள போதை பவுடரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த சர்வதேச விமானத்தில் பயணம் செய்து உகாண்டா நாட்டை சேர்ந்த நம்பீரா நோலின் (28) என்ற பெண்ணிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அவரிடம் இருந்த பையில் விலை உயர்ந்த போதை பவுடரை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து 1 கிலோ 756 கிராம் மெத்தகுலோன், 1 கிலோ 431 கிராம் ஹெராயின் என ரூ.8 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 187 கிராம் போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவற்றை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண்ணை கைது செய்தனர்.